முதலமைச்சர் விஜய் கான்வாயில் புகுந்த வாலிபரால் பரபரப்பு!

 
கான்வாய் கான்வாய்

தமிழகத்தில் புதிய அரசு அமைந்ததைத் தொடர்ந்து முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், சென்னை தலைமைச் செயலகத்திற்கு தினசரி வந்து செல்கிறார். அவரைப் பார்ப்பதற்காகப் பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் பலர் தினசரி கோட்டை வாசல் அருகே திரண்டு நின்று வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

முதலமைச்சர் விஜய்யும் மக்களின் அன்பை ஏற்கும் விதமாகத் தனது காரின் கண்ணாடி கதவுகளை முழுமையாக இறக்கி விட்டு, இன்முகத்துடன் அவர்களுக்குக் கையசைத்தபடி செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

முதல்வர் கான்வாய் போக்குவரத்து விஜய் கார்

இந்நிலையில் நேற்று மாலை நேரத்தில் வழக்கம் போலத் தனது அரசுப் பணிகளை முடித்துவிட்டுத் தலைமைச் செயலகத்தில் இருந்து காரில் தனது வீட்டிற்கு முதலமைச்சர் விஜய் புறப்பட்டார். அப்போது கோட்டை வாசல் அருகே திரண்டிருந்த கூட்டத்தில் இருந்து வாலிபர் ஒருவர், முதலமைச்சரை மிக அருகில் பார்க்கும் ஆவலில் போலீஸ் பாதுகாப்புடன் சென்ற முதலமைச்சரின் பாதுகாப்பு வாகன அணிவகுப்பிற்கு இடையே சற்றும் எதிர்பாராத வகையில் திடீரென உள்ளே புகுந்தார்.

கான்வாய்

உயர்பாதுகாப்பு வளையத்திற்குள் அந்த நபர் திடீரென நுழைந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், உடனடியாகச் செயல்பட்டு அந்த வாலிபரைத் தடுத்துப் பிடித்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பாதுகாப்புக் காரணங்களுக்காக அந்த நபரிடம் தீவிர விசாரணை நடத்திய காவல்துறையினர், பின்னர் அவரை எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். முதலமைச்சரின் வாகன அணிவகுப்பிற்குள் வாலிபர் புகுந்த இந்தத் திடீர் சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.