சந்தேக மரணத்தில் திடீர் திருப்பம்! 18 வயது நர்சிங் மாணவி கழுத்தை நெரித்து கொலை

 
telengana

 

தெலுங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டத்தில் 18 வயது நர்சிங் மாணவி சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனையில் அவர் கழுத்தை நெரித்ததால் உயிரிழந்தது தெரியவந்ததை தொடர்ந்து, போலீசார் சந்தேக மரண வழக்கை கொலை வழக்காக மாற்றியுள்ளனர்.ஜூலூருபாடு மண்டலம் வெங்கன்னபாலெம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிணி (18). இவர் கம்மம் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.எஸ்சி. நர்சிங் படித்து வந்தார். கல்லூரி விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

சம்பவத்தன்று ஹரிணியின் தாயார் ராஜேஸ்வரி, அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். பின்னர் வீடு திரும்பியபோது மகளை காணவில்லை. இதையடுத்து அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் தேடியபோது, வீட்டின் கழிவறைக்கு பின்புறம் ஹரிணி சடலமாக கிடந்தது தெரியவந்தது.அவரது உடலில் காயங்களும், கழுத்தில் நெரிக்கப்பட்டதற்கான தடயங்களும் இருந்ததால் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மற்றும் தடயவியல் குழுவினர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து, பல்வேறு ஆதாரங்களை சேகரித்தனர்.

இதற்கிடையே நடைபெற்ற பிரேதப் பரிசோதனையில், ஹரிணி கழுத்தை நெரித்ததால் உயிரிழந்தது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சந்தேக மரணம் தொடர்பாக பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கு, பாரதிய நியாய சன்ஹிதாவின் கொலைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.ஹரிணியின் தாயார், அதே கிராமத்தைச் சேர்ந்த பவன் குமார் என்ற இளைஞர் மீது சந்தேகம் தெரிவித்து போலீசில் புகார் அளித்துள்ளார். தனது மகளை திருமணம் செய்யுமாறு அவர் தொடர்ந்து வற்புறுத்தியதாகவும், இதன் காரணமாக அவர் மீது சந்தேகம் இருப்பதாகவும் தாய் புகாரில் கூறியுள்ளார். இது புகாரில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டு மட்டுமே.

போலீசார் பவன் குமாரை முக்கிய சந்தேக நபராக கருதி தேடி வருகின்றனர். சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், மருத்துவ பரிசோதனையில் பாலியல் தாக்குதலுக்கான அறிகுறிகள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், வழக்கின் அனைத்து கோணங்களிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.