அரசு மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து - 5 குழந்தைகள் பலி!

 
telengana

தெலங்கானா மாநிலம் ஆதிலாபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் (RIMS) அரசு மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.கடந்த செப்டம்பர் 21-ம் தேதி இரவு சுமார் 11.40 மணியளவில், புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சைப் பிரிவில் திடீரென தீப்பற்றியது. அப்போது அந்தப் பிரிவில் சுமார் 27 பச்சிளம் குழந்தைகள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீப்பற்றியதும் வார்டு முழுவதும் புகை சூழ்ந்தது. மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் உறவினர்கள் இணைந்து குழந்தைகளை பாதுகாப்பாக வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 22 குழந்தைகள் மீட்கப்பட்டு RIMS மற்றும் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முதற்கட்டமாக 3 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த நிலையில், மேலும் 2 குழந்தைகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதையடுத்து பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்த குழந்தைகள் பலரும் குறைமாதத்தில் பிறந்தவர்கள் என மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அடர்த்தியான புகை மற்றும் நச்சு வாயுக்களை சுவாசித்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

குழந்தை வாயில் டேப்

தீ விபத்துக்கான சரியான காரணம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. ஜன்னல் ஏசி பகுதியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீப்பற்றியிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து விரிவான விசாரணைக்கு தெலங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் RIMS மருத்துவமனையில் மின் பாதுகாப்பு, தீ பாதுகாப்பு மற்றும் கட்டிட பாதுகாப்பு தொடர்பாக தனித்தனியாக ஆய்வுகள் நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணையில் அலட்சியம் அல்லது பாதுகாப்பு குறைபாடுகள் கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்தில் இருந்து மீட்கப்பட்ட குழந்தைகளில் சிலருக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.