கணவரைக் கொன்று மாட்டு வண்டியில் உடலை எடுத்துச் சென்ற மனைவி!
தெலங்கானா மாநிலம் ஜெயசங்கர் பூபாலப்பள்ளி மாவட்டத்தில், மனைவியும் அவரது நண்பரும் சேர்ந்து கணவரைக் கொலை செய்ததாக எழுந்துள்ள புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்யப்பட்டவரின் உடலை மாட்டு வண்டியில் எடுத்துச் சென்று கிராமத்தின் ஒதுக்குப்புறத்தில் வீசியதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொல்லபுத்தாரம் தண்டா பகுதியைச் சேர்ந்த அஜ்மீரா சந்து நாயக் (40), பவானி தம்பதிக்கு 2014-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பவானிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த தராவத் சந்தோஷுக்கும் தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும், பிரச்சினை குறித்து ஊர் பெரியவர்கள் முன்னிலையில் பேச முடிவு செய்யப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், வியாழக்கிழமை நள்ளிரவில் சந்துவை இருவரும் தாக்கிக் கொலை செய்ததாக போலீசார் சந்தேகிக்கின்றனர். பின்னர் உடலை மூட்டையாகக் கட்டி மாட்டு வண்டியில் எடுத்துச் சென்று சிக்கன்பள்ளி அருகே வீசியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பவானி, சந்தோஷ் இருவரும் தலைமறைவாக இருப்பதாகவும், அவர்களைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது
