சட்டப்படி தத்தெடுக்கல... 3 ஆண்டுகள் வளர்த்த பெற்றோரை பார்த்ததும் கதறும் குழந்தை ... நெகிழ்ச்சி வீடியோ!

 
ஐதராபாத்

 

தெலங்கானாவில், சட்டப்பூர்வமான தத்தெடுப்பு நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை எனக் கூறி, மூன்று ஆண்டுகளாக வளர்த்து வந்த தம்பதியிடமிருந்து பிரிக்கப்பட்ட சிறுவன் மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

குழந்தை இல்லாத சரிதா - சீனிவாஸ் தம்பதி, பிறந்து ஐந்து நாட்களே ஆன ஆண் குழந்தையைத் தங்களிடம் அழைத்து வந்து வளர்த்து வந்தனர். குழந்தையின் பெற்ற தாய் பிரசவத்துக்குப் பிறகு உயிரிழந்ததால், அந்தச் சிறுவனைத் தங்களது சொந்தக் குழந்தையாகவே இருவரும் பராமரித்து வந்தனர்.

3 ஆண்டுகள் வளர்த்த குழந்தை... சட்டப்படி தத்தெடுக்கவில்லை என பிரித்த அதிகாரிகள்

இந்நிலையில், முறையான சட்ட நடைமுறைகள் இல்லாமல் குழந்தை தத்தெடுக்கப்பட்டதாகக் கூறி, குழந்தை நலக்குழு அதிகாரிகள் சிறுவனைத் தம்பதியிடமிருந்து பிரித்து அரசு குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் சேர்த்தனர். அங்கு தம்பதியைக் கண்ட சிறுவன், அவர்களுடன் செல்ல வேண்டும் என அழுத காட்சி சமூக வலைதளங்களில் பரவியது.

இதையடுத்து தம்பதியினர் தெலங்கானா உயர்நீதிமன்றத்தை அணுகினர். குழந்தையை அவர்களிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து ஜக்தியால் மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையால், நவம்பர் 2-ம் தேதி மாலை சிறுவன் மீண்டும் தம்பதியிடம் ஒப்படைக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவம் குழந்தையின் நலன் மற்றும் தத்தெடுப்பு நடைமுறைகள் குறித்த விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.