கோர விபத்து! ஆட்டோ மீது லாரி மோதியதில் 5 பெண்கள் பலி - பலர் படுகாயம்... பகீர் சிசிடிவி காட்சிகள்!

 
விபத்து

 

தெலங்கானா மாநிலம் மஞ்சேரியல் மாவட்டம் நாஸ்பூர் கேட் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டோவும் லாரியும் மோதிய பயங்கர விபத்தில் 5 பெண்கள் உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயமடைந்தனர்.நாஸ்பூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் வேலைக்காக ஆட்டோவில் பயணம் செய்துகொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. நாஸ்பூர் கேட் அருகே சாலை தடுப்பில் இருந்த இடைவெளி வழியாக ஆட்டோ எதிர்புற சாலைக்குச் சென்றதாகவும், அப்போது எதிரே வந்த லாரியுடன் மோதியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மோதலில் ஆட்டோ பலத்த சேதமடைந்தது. முதற்கட்டமாக 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்தவர்கள் மஞ்சேரியல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் சிகிச்சை பலனின்றி மேலும் சிலர் உயிரிழந்ததை தொடர்ந்து பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.

உயிரிழந்தவர்களில் சௌந்தர்யா, லட்சுமி, சுமலதா, சோனியா உள்ளிட்டோர் அடங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் காயமடைந்த சிலர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.விபத்து குறித்து நாஸ்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை தடுப்பில் இருந்த இடைவெளி வழியாக ஆட்டோ சென்றது எப்படி, விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, நாஸ்பூர் கேட் பகுதி விபத்து ஏற்படக்கூடிய பகுதியாக அடையாளம் காணப்பட்டு, சாலை தடுப்பில் உள்ள இடைவெளியை மூடுவது உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.வேலைக்குச் சென்ற பெண்கள் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் மஞ்சேரியல் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.