மண்டி பிரியாணி சாப்பிட்ட 19 வயது இளைஞர் பலி! 19 பேர் மருத்துவமனையில் சிகிச்சை
தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் நர்சாபூரில் உள்ள ‘ஒன் பேலஸ்’ உணவகத்தில் மண்டி பிரியாணி சாப்பிட்ட 19 வயது இளைஞர் உயிரிழந்தார். மேலும் 19 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நர்சாபூரில் உள்ள ஒன் பேலஸ் உணவகத்தில் சாய் ராம் என்ற இளைஞர் மண்டி பிரியாணி சாப்பிட்டுள்ளார். அவருடன் உணவு சாப்பிட்ட சிலருக்கும் சிறிது நேரத்தில் வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் சாய் ராமின் உடல்நிலை மோசமடைந்ததால், சங்காரெட்டி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார். மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த தெலங்கானா சுகாதாரத்துறை அமைச்சர் தாமோதர் ராஜ நரசிம்மா, விரிவான விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். உணவகத்தில் தயாரிக்கப்பட்ட உணவின் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட உள்ளன. உணவு தயாரிப்பு, சேமிப்பு மற்றும் சுகாதார நடைமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட்டனவா என்றும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதற்கிடையே, உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட ஆய்வில், உணவகம் உரிய உரிமம் இன்றி செயல்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து உணவகம் தற்காலிகமாக மூடப்பட்டது. உணவு உட்கொண்டதற்கும் உடல்நலப் பாதிப்புக்கும் உள்ள தொடர்பு ஆய்வக முடிவுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டியுள்ளது. விசாரணையின் முடிவில் விதிமீறல்கள் உறுதியானால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
