“இனி இந்த வாழ்க்கை வேண்டாம்” பெற்றோருக்கு வீடியோ அனுப்பி இளைஞர் மாயம் ... பரபரப்பு வீடியோ!

 
இளைஞர்

 

தெலங்கானா மாநிலம் மகபூப்நகர் மாவட்டத்தில், மனைவி துன்புறுத்துவதாகக் கூறி பெற்றோருக்கு செல்ஃபி வீடியோ அனுப்பிய 23 வயது இளைஞர் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலாநகர் மண்டலம் மோத்திகனாபூர் கிராமத்தைச் சேர்ந்த சிவபிரசாத் என்பவர், தனது மனைவி அடிக்கடி தகாத வார்த்தைகளால் திட்டுவதாகவும், தன்னைத் தாக்குவதாகவும் வீடியோவில் தெரிவித்துள்ளார். மேலும், குடும்பத்தினர் முன்னிலையில் தன்னைத் தவறானவராகச் சித்தரிப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

பெண்களுக்குச் சாதகமான சட்டங்களைப் பயன்படுத்தி தன்னை மிரட்டுவதாகவும் கூறிய அவர், இனி இந்த வாழ்க்கையை வாழ விருப்பமில்லை என்றும், பெற்றோர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றும் உருக்கமாகப் பேசியுள்ளார்.

வீடியோவை அனுப்பிய பிறகு ஸ்கூட்டரில் ஹைதராபாத் நோக்கிச் சென்ற சிவபிரசாத், கோத்தூர் அருகே வாகனத்தை நிறுத்திவிட்டு மாயமானதாகக் கூறப்படுகிறது.இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்