ரத யாத்திரையில் தேரில் 11000 வோல்ட் உயர் மின்னழுத்த கம்பி உரசி மின்சாரம் பாய்ந்த விபத்தில் 2 மாணவர்கள் பரிதாபப் பலி!

 
ஜார்க்கண்ட்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள குந்தி மாவட்டம் தோர்பா பகுதியில் இன்று நடைபெற்ற புகழ்பெற்ற ஜெகநாதர் ரத யாத்திரை விழாவின் போது தேரில் மின்சாரம் பாய்ந்து 2 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட தேரில் ஜெகநாதர் எழுந்தருளியதைத் தொடர்ந்து, அங்குள்ள முக்கிய வீதிகள் வழியாகச் சிறப்புப் பூஜைகளுடன் தேர் வடம் பிடிக்கப்பட்டது. சிறியவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பலரும் மிகுந்த உற்சாகத்துடன் அந்தத் தேரை வடம் பிடித்து இழுத்து வந்து கொண்டிருந்த வேளையில் இந்தத் திடீர் விபரீதம் அரங்கேறியுள்ளது.

பக்தர்களின் கூட்டத்திற்கு இடையே நகர்ந்து சென்ற அந்தத் தேர், ஒரு குறிப்பிட்ட வீதியின் வளைவில் திரும்பிய போது அங்கு தாழ்வாகச் சென்ற 11000 வோல்ட் உயர் மின்னழுத்த கம்பி மீது பலமாக உரசியுள்ளது. இதனால் அந்த மாபெரும் தேரில் மிக அதிக அழுத்த மின்சாரம் அலாதியாகப் பாய்ந்ததால், தேரை வடம் பிடித்து இழுத்து வந்த மாணவர்கள் அனைவரும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டனர். இந்தத் திடீர் விபத்தினால் ரத யாத்திரை நடைபெற்ற பகுதியில் பெரும் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டுப் பதற்றமான சூழல் நிலவியது.

அங்கிருந்த உள்ளூர் மக்கள் உடனடியாகச் செயல்பட்டு மின்சார வாரியத்திற்குத் தகவல் வழங்கி மின் இணைப்பைத் துண்டித்ததுடன், மீட்புப் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த மின்விபத்தில் மொத்தம் 7 மாணவர்கள் பலத்த காயமடைந்த நிலையில், அவர்கள் அனைவரும் அவசரச் சிகிச்சைக்காக அருகில் உள்ள தோர்பா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல்சிகிச்சைக்காகக் குந்தி சதார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட 2 மாணவர்கள் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில், தோர்பா போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.