தென்காசி மாவட்ட நூலகத்தில் 2,200 சர்ச்சைக்குரிய புத்தகங்கள் அகற்றம் !
தமிழகத்தில் அரசு நூலகங்களுக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, தென்காசி மாவட்ட மைய நூலகத்தில் இருந்து சுமார் 2,200 புத்தகங்கள் அகற்றப்பட்டுள்ளன.
கோவையில் உள்ள பெரியார் அறிவுலகம் நூலகத்தில் போலி எழுத்தாளர்கள் பெயர்களிலும், செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் புத்தகங்கள் இடம்பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, அகல்விளக்கு பதிப்பகம் உள்ளிட்ட பதிப்பகங்களிலிருந்து அரசு நூலகங்களுக்கு வாங்கப்பட்ட புத்தகங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த ஆய்வின் ஒரு பகுதியாக, தென்காசி மாவட்ட மைய நூலகத்தில் இருந்த அகல்விளக்கு பதிப்பகத்தின் சுமார் 2,200 புத்தகங்கள் வாசகர்களுக்கான அலமாரிகளில் இருந்து அகற்றப்பட்டு தனி அறையில் வைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான புத்தகங்களின் விலை ரூ.1,000-க்கும் அதிகமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தென்காசி மாவட்டத்தின் பிற நூலகங்களிலும் இந்தப் பதிப்பகத்தின் புத்தகங்கள் உள்ளனவா என ஆய்வு செய்து, அவற்றையும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, அரசு நூலகங்களுக்கான புத்தகக் கொள்முதலில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையையும் தொடங்கியுள்ளது.
