தோட்டத்துக்குச் சென்ற ஓய்வுபெற்ற அரசு ஊழியர்; யானை மிதித்து பலி – தென்காசியில் சோகம்!

 
முதியவர்

 

தென்காசி மாவட்டம் புளியரை அருகே தோட்டத்திற்குச் சென்ற ஓய்வுபெற்ற நெடுஞ்சாலைத்துறை ஊழியர் காட்டுயானை தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆம்புலன்ஸ்

புளியரை தெற்குமேடு பகுதியைச் சேர்ந்த சுப்பையா (70), நெடுஞ்சாலைத்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவருக்குச் சொந்தமான தென்னந்தோப்பு, புளியரை தட்சிணாமூர்த்தி கோவில் பின்புறம் உள்ள கொட்டாவிகுளம் பகுதியில் அமைந்துள்ளது.

இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல் தனது தோட்டத்திற்குச் சென்ற சுப்பையாவை அங்கு சுற்றித்திரிந்த ஒற்றைக் காட்டுயானை திடீரென தாக்கி காலால் மிதித்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், அப்பகுதியில் நீண்ட நாட்களாக யானைகள் நடமாட்டம் இருப்பதாகவும், இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினர். மேலும், சுப்பையாவின் உடலை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து போலீசார் மற்றும் வனத்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் உடல் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.