தென்காசியில் அதிர்ச்சி! 2 குழந்தைகளுக்கு தீ வைத்து தாயும் தற்கொலை - குடும்பத் தகராறில் சோகம்
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே குடும்பத் தகராறு காரணமாக தனது 2 குழந்தைகளுக்கு தீ வைத்து தாயும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சிவகிரி அருகே வடக்கு சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் காளிபாண்டி. பெயிண்டிங் தொழிலாளியான இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவியும், கபினேஸ்வரன், ரபினேஸ்வரன் என்ற 2 மகன்களும் இருந்தனர்.

இந்த நிலையில், அப்பகுதியில் உள்ள கோவிலில் புரட்டாசி திருவிழா நடைபெற்றுள்ளது. அங்கு மாரியம்மாள் தனது 2 குழந்தைகளுடன் சென்றதாகவும், கும்மி நிகழ்ச்சியில் பங்கேற்றதாகவும் கூறப்படுகிறது.அப்போது அங்கு சென்ற காளிபாண்டி மதுபோதையில் இருந்ததாகவும், கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் முன்னிலையில் மாரியம்மாளை காளிபாண்டி தாக்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் மனவேதனை அடைந்த மாரியம்மாள், தனது 2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் வீட்டின் கதவை உள்புறமாக பூட்டிக்கொண்டதாக கூறப்படுகிறது.அதன்பிறகு, மாரியம்மாள் தனது 2 குழந்தைகள் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததுடன், தானும் தீக்குளித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வீட்டுக்கு சென்று பார்த்துள்ளனர். கதவு உள்புறமாக பூட்டப்பட்டிருந்ததால், வீட்டின் மேற்கூரையை பிரித்து உள்ளே சென்றதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில் மாரியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய 2 குழந்தைகளையும் மீட்டு சிவகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.ஆனால் சிகிச்சை பலனின்றி 2 குழந்தைகளும் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் கபினேஸ்வரன் மற்றும் ரபினேஸ்வரன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
