தென்காசி அருகே தோட்டத்தில் எரிந்த நிலையில் பெண் சடலம்… !
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே தோட்டத்தில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் யார், அவர் உயிரிழந்தது எப்படி என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுரண்டை - சுந்தரபாண்டியபுரம் சாலையில் மாரியப்பன் என்பவருக்குச் சொந்தமான தோட்டம் உள்ளது. அங்கு வாழை மற்றும் பூசணி பயிரிடப்பட்டுள்ளன. இந்நிலையில், இன்று (நவம்பர் 6) காலை அந்த வழியாகச் சென்றவர்கள் தோட்டத்தில் பெண்ணின் உடல் எரிந்த நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுமார் 45 முதல் 50 வயதுக்குள் இருக்கலாம் எனக் கருதப்படும் அந்தப் பெண்ணின் அடையாளம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

சாம்பவர் வடகரை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுற்றுவட்டாரப் பகுதிகளில் காணாமல் போன பெண்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்படுவதுடன், அருகிலுள்ள சாலைகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. பெண்ணின் மரணத்திற்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெறுகிறது.
