டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தில் பதற்றம்... பாதுகாப்புப் படை வீரர் மீது கத்திக்குத்து தாக்குதல்!

 
டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டம்

டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின்போது, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை வீரர் மீது போராட்டக்காரர் ஒருவர் கத்தியால் தாக்குதல் நடத்திய சம்பவம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான தேசிய மாணவர் சங்கம் சார்பில் தேர்தல் முறைகேடுகள் தொடர்பான புகார்களை முன்வைத்து, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் மற்றும் அவரை கைது செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்றது.

டெல்லி தடியடி

அப்பகுதியில் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சிஐஎஸ்எஃப் வீரர் பிக்ரம் குமார், தடுப்புகள் அருகே இருந்த போராட்டக்காரர் ஒருவரை அங்கிருந்து நகரச் சொல்ல முயன்றபோது, அவர் திடீரெனக் கத்தியால் வீரரைத் தாக்கியுள்ளார். பிக்ரம் குமார் சுதாரித்து விலகியதால் கழுத்தில் விழ வேண்டிய கத்திக்குத்து அவரது வலது முழங்கையில் பட்டது. இத்தாக்குதலில் லேசான காயமடைந்த வீரர் பிக்ரம் குமார், டெல்லியில் உள்ள ஆர்.எம்.எல். மருத்துவமனையில் முதலுதவி பெற்று வீடு திரும்பினார்.

இச்சம்பவம் தொடர்பாகத் தாக்குதலில் ஈடுபட்ட நபர் உடனடியாகத் தடுத்து வைக்கப்பட்டு, சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு காவல்துறையினர் தீவிர சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.