விமான நிலையத்தில் பரபரப்பு... பயணி பையில் மண்டை ஓடு பறிமுதல்!

 
மண்டை ஓடு

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பயணி ஒருவரின் கைப்பையிலிருந்து குரங்கின் மண்டை ஓடு பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியிலிருந்து ஐதராபாத் செல்லவிருந்த விமானத்தில் ஏறுவதற்காக வந்த பயணியின் உடைமைகளை விமான நிலைய ஊழியர்கள் பரிசோதனை செய்தனர்.

விமானம் விமான நிலையம்

பயணியின் கைப்பையில் சந்தேகத்திற்குரிய பொருள் இருப்பதை அறிந்த ஊழியர்கள், உடனடியாக மத்திய தொழில் பாதுகாப்புப் படையினருக்கு தகவல் அளித்தனர். அந்தப் பொருளை வெளியே எடுத்துப் பார்த்தபோது அது ஒரு மண்டை ஓடு எனத் தெரியவந்தது. அதிகாரிகளின் தீவிர விசாரணையில், அது ஒரு குரங்கின் மண்டை ஓடு என்பதை அந்தப் பயணி ஒப்புக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து அந்தப் பயணி உடனடியாக உள்ளூர் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். பறிமுதல் செய்யப்பட்ட மண்டை ஓடு மேலதிக பரிசோதனைக்காகப் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இது வனவிலங்கு சார்ந்த குற்றம் என்பதால், வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 1972-ன் கீழ் அந்தப் பயணி மீது சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.