எல்லையில் பதற்றம்... பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஆப்கானிஸ்தானில் 80-க்கும் மேற்பட்டோர் பலி!

 
ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான்

பாகிஸ்தானில் அண்மைக் காலமாக அதிகரித்து வரும் தற்கொலை படைத் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான் விமானப்படை இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாகாணங்களான நங்கர்ஹார், பாக்டிகா மற்றும் கோஸ்ட் ஆகிய பகுதிகளில் உள்ள 7 தீவிரவாத முகாம்களைக் குறிவைத்து பாகிஸ்தான் விமானங்கள் குண்டுகளை வீசின. பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை தரப்பில், இந்தத் தாக்குதலில் 80-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆப்கானிஸ்தான் தரப்பில் 18 முதல் 20 பேர் வரை கொல்லப்பட்டதாகவும், அவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிகளவில் இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான்

இம்மாத தொடக்கத்தில் இஸ்லாமாபாத் மசூதி மற்றும் பன்னு பகுதிகளில் நடந்த தற்கொலைத் தாக்குதல்களில் பல பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு ஆப்கானிஸ்தானில் பதுங்கியிருக்கும் தெஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான் மற்றும் ஐஎஸ்-கே அமைப்புகளே காரணம் எனப் பாகிஸ்தான் குற்றம் சாட்டியது.

ஆப்கானிஸ்தானின் இறையாண்மையை மீறும் வகையில் பாகிஸ்தான் அத்துமீறித் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தாலிபான் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. "மக்களின் வீடுகள் மற்றும் மதப் பள்ளிகள் (மதராசா) மீது குண்டுகள் வீசப்பட்டுள்ளன. இதற்குத் தகுந்த நேரத்தில் பதிலடி கொடுப்போம்" எனத் தாலிபான் பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த மோதலில் இரு தரப்பிலும் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். அதன் பிறகு தற்போது நடந்துள்ள இந்த மிகப் பெரிய வான்வழித் தாக்குதலால், பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் மீண்டும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன.