கோவை மத்திய சிறையில் பரபரப்பு... பாலியல் வழக்கில் கைதானவர் மீது சக கைதிகள் கொடூரத் தாக்குதல்!

 
கோவை சூலூர் பாலியல் கோவை சூலூர் பாலியல்

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி கார்த்திக் என்பவரை, அங்குள்ள சக கைதிகள் ஒன்றுசேர்ந்து ஓட ஓட விரட்டித் தாக்கியுள்ள சம்பவம் சிறை வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சூலூர் பகுதியில் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கிய 10 வயது சிறுமி பாலியல் கொலை வழக்கில், முக்கியக் குற்றவாளியான கார்த்திக் என்பவரைக் காவல் துறையினர் அண்மையில் கைது செய்திருந்தனர். போலீஸ் காவலில் இருந்த போது தப்பியோட முயன்றதாகக் கூறப்படும் கார்த்திக்கிற்கு ஏற்கனவே கை முறிவு ஏற்பட்டு, கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

சிறுமி கொலை

சிகிச்சை முடிந்து ஓரளவிற்குக் குணமடைந்ததைத் தொடர்ந்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று தான் அவர் கோவை மத்திய சிறையில் கொண்டு வந்து அடைக்கப்பட்டார். இந்நிலையில், இன்று மதியம் சிறை வளாகத்தின் குறிப்பிட்ட ஒரு பகுதியில் கார்த்திக் இருந்த போது, அங்கு திரண்ட சக கைதிகள் சிலர், சிறுமியின் கொலை வழக்கில் அவர் கைதானவர் என்பதை அறிந்து கடும் ஆத்திரமடைந்துள்ளனர்.

சட்ட விதிகளையும், சிறைக் காவலர்களின் பாதுகாப்பையும் மீறி, சக கைதிகள் கார்த்திக்கை வளைத்துப் போட்டு சரமாரியாகத் தாக்கத் தொடங்கினர். இதில் ஏற்கனவே பலவீனமாக இருந்த அவரது உடலில் பல்வேறு இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு, அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

சிறைக்குள் சலசலப்பு சத்தம் கேட்டு ஓடிவந்த சிறைக் காவலர்கள், உடனடியாகக் கைதிகளிடம் இருந்து கார்த்திக்கை மீட்டு முதலுதவி அளித்தனர். எனினும், அவரது உடலில் புதிய காயங்கள் ஏற்பட்டு நிலைமை மோசமடைந்ததால், பலத்த பாதுகாப்புடன் அவர் மீண்டும் கோவை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அவசர அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

கோவை சிறுமி உடல் தகனம்

சிறைச்சாலைக்குள் ஒரு கைதி மீது சக கைதிகள் இத்தகைய கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளது குறித்து, கோவை மத்திய சிறைக் கண்காணிப்பாளர் தலைமையில் சிறைக் காவலர்கள் தற்பொழுது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாக்குதலில் ஈடுபட்ட கைதிகள் யார்? இதன் பின்னணியில் உள்ள காரணங்கள் என்ன? என்பது குறித்துத் துறையினரின் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தவெக புதிய அரசு அமைந்த பிறகு, கோவை மற்றும் திருப்பூர் பகுதிகளில் சட்டம் ஒழுங்கு சார்ந்த விவகாரங்கள் அடுத்தடுத்து வெளிவந்து கொண்டிருக்கும் வேளையில், மத்திய சிறைக்குள்ளேயே கைதி தாக்கப்பட்ட இந்தச் சம்பவம் கோவையில் கூடுதல் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.