தருமபுரியில் பதற்றம்... மதுபோதையில் தாய், மகள் அரிவாளால் வெட்டிக் கொலை!
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே மதுபோதையில் ஏற்பட்ட குடும்பத் தகராறில் சமையல் மாஸ்டர் ஒருவர் தனது தாய் மற்றும் மகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த கோரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த அதிகாரப்பட்டி அம்மன் நகரைச் சேர்ந்தவர் சுரேஷ் (45). சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வரும் இவர், சம்பவத்தன்று மதுபோதையில் குடும்பப் பிரச்சினை காரணமாக தனது மகள் சின்மயியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஆத்திரம் அடைந்த அவர் மகளை அரிவாளால் தாக்கியுள்ளார்.

மகளின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்து அவர்களைத் தடுத்து நிறுத்த முயன்ற தாய் உமாரணியையும் (65) சுரேஷ் தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த தாய் உமாரணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த காவல்துறையினர் உடனடியாக விரைந்து சென்று, காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் கொலைத் தொடர்பாகச் சுரேஷைக் கைது செய்துள்ள காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
