திண்டுக்கல்லில் பதற்றம்.. பரபரப்பு... லாரி கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 25,000 லிட்டர் ஆசிட் சாலையில் கொட்டி கசிவு!
திண்டுக்கல் பகுதியில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் ஏற்றிச் சென்ற லாரி எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது. இதில் லாரியிலிருந்து சுமார் 25 ஆயிரம் லிட்டர் ஆசிட் சாலையில் கசிந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் அச்சமும் ஏற்பட்டது.
தொழிற்சாலைகளுக்குப் பயன்படுத்தப்படும் வீரியமிக்க ஹைட்ரோகுளோரிக் ஆசிட்டை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. திண்டுக்கல் பகுதியில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி விபத்துக்குள்ளானது. இதில் லாரியில் டேங்க்கில் சேமிக்கப்பட்டிருந்த சுமார் 25,000 லிட்டர் ஆசிட் சாலையில் பெருமளவில் கசிந்து ஓடத் தொடங்கியது.

திடீரென ஆசிட் கசிவு ஏற்பட்டதைக் கண்ட அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். ஆசிட் காற்றுடன் கலப்பதால் பொதுமக்களுக்குப் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருந்தது. காற்றில் ஆசிட் கலப்பதால் அதனைச் சுவாசிப்பவர்களுக்குத் தொண்டை அரிப்பு, தொண்டை கரகரப்பு, கடுமையான கண் எரிச்சல் மற்றும் உடலில் ஒவ்வாமை அல்லது அரிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும் அபாயம் தீவிரமாக இருந்தது.

தகவல் அறிந்ததும் உடனடியாகத் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சாலையில் பெருக்கெடுத்து ஓடிய ஆசிட்டின் வீரியத்தைக் குறைக்க, தீயணைப்பு வாகனங்கள் மூலம் அதிக அளவுத் தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பட்டது. இதனால் ஆசிட்டின் வீரியம் குறைக்கப்பட்டு, அது மேலும் பரவுவது வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தப்பட்டது. இச்சம்பவம் குறித்துக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
