மதுரையில் பதற்றம்... தவெகவினர் மீது தாக்குதல்... கார் கண்ணாடிகள் உடைப்பு!

 
தவெக தவெக

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மதுரை கப்பலூர் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வெளியே இன்று மாலை தவெக தொண்டர்கள் மீது அடையாளம் தெரியாத மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.

வீடி

மதுரை மேற்கு மற்றும் திருமங்கலம் உள்ளிட்ட தொகுதிகளின் வாக்குகள் கப்பலூர் மையத்தில் எண்ணப்பட்டு வந்தன. வாக்கு எண்ணிக்கை முடிந்து தவெக நிர்வாகிகள் வெளியே வந்தபோது, அங்குத் திரண்டிருந்த ஒரு கும்பல் திடீரென வன்முறையில் ஈடுபட்டது.

தவெக நிர்வாகிகள் வந்த கார்களின் கண்ணாடிகளை அடியாள்கள் கற்கள் மற்றும் கட்டைகளைக் கொண்டு அடித்து நொறுக்கினர். கட்சித் தொண்டர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதில் சிலருக்குக் காயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த வன்முறைச் சம்பவத்தைச் சிலர் தங்களது செல்போனில் படம்பிடித்துச் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். "மதுரையில் தவெக-விற்குப் பாதுகாப்பு இல்லையா?" என்ற கேள்வியோடு இந்த வீடியோ தற்போது இணையத்தில் தீயாய்ப் பரவி வருகிறது.

வீடி

சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்த மதுரை மாவட்ட போலீசார், வன்முறையில் ஈடுபட்டவர்களைக் கலைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

தேர்தலில் தவெக 108 இடங்களை வென்றுள்ள நிலையில், கட்சித் தொண்டர்களைக் குறிவைத்துத் திட்டமிட்டு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தவெக நிர்வாகிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் கப்பலூர் மற்றும் மதுரையின் முக்கியப் பகுதிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.