மதுரையில் பதற்றம்... லாக்-அப் டெத் விவகாரத்தில் காவல்துறை பரபரப்பு விளக்கம்!
மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையத்தில் ஓட்டுநர் பாலகிருஷ்ணன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இச்சம்பவம் குறித்துக் காவல்துறை தரப்பில் முக்கிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. லாரி தீப்பிடித்து எரிந்ததாக அளித்த புகாரில் முரண்பாடு ஏற்பட்டுச் சிக்கிக்கொண்ட பயத்திலேயே அவர் தற்கொலை செய்துகொண்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஓட்டுநர் பாலகிருஷ்ணன், 4 நாட்களுக்கு முன்பு தனது லாரி தீப்பிடித்து எரிந்துவிட்டதாகச் செக்கானூரணி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்தப் புகார் தொடர்பான விசாரணைக்காகவே அவர் காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

புகார் அளிப்பதற்காகவும், மேல் விசாரணைக்காகவும் காவல் நிலையத்திற்கு வந்திருந்த பாலகிருஷ்ணனைக் காவல்துறையினர் நிலையத்தில் அமர வைத்திருந்தனர். இதற்கிடையே, லாரி தீப்பிடித்து எரிந்ததாகக் கூறப்பட்ட சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளைக் கைப்பற்றி தீவிரமாக ஆய்வு செய்தனர்.
சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, பாலகிருஷ்ணன் அளித்திருந்த புகாரில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பது காவல்துறையினருக்குத் தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. தனது புகாரில் உள்ள முரண்பாடுகளைக் காவல்துறையினர் கண்டறிந்துவிட்டதால், இவ்விவகாரத்தில் தான் சிக்கிக்கொள்வோம் என்ற கடுமையான பயத்திற்கு பாலகிருஷ்ணன் ஆளானதாகக் காவல்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இந்த மன உளைச்சல் மற்றும் பயத்தின் காரணமாக, காவல் நிலையத்திற்குள் இருந்த கழிவறைக்குச் சென்ற பாலகிருஷ்ணன் அங்குத் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஏற்கனவே இச்சம்பவம் தொடர்பாகச் செக்கானூரணி காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 2 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, உயிரிழந்தவரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், காவல்துறையின் இந்தப் புதிய விளக்கம் வழக்கில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
