ராமநாதபுரத்தில் பதற்றம்... முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் வெட்டிக் கொலை; உறவினர்கள் சாலை மறியல்!
ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் அருகே பழைய நிலத் தகராறு காரணமாக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் வெட்டிக் படுகொலை செய்யப்பட்டுள்ளார். குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் அருகேயுள்ள சிறைக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆர்தர் (56). இவர் அப்பகுதியில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவராகப் பதவி வகித்துள்ளார். இவருக்கும் சில நபர்களுக்கும் இடையே நீண்ட நாட்களாகப் பழைய நிலத் தகராறு நிலவி வந்துள்ளது. இந்நிலையில், அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகில் அவர் சென்றுகொண்டிருந்தபோது, மர்ம நபர்களால் பயங்கர ஆயுதங்களால் வெட்டிக் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், குற்றவாளிகளைக் காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தியும் அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் ராமேஸ்வரம் - கன்னியாகுமரி கிழக்குக் கடற்கரைச் சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர்.
இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், மறியலில் ஈடுபட முயன்ற உறவினர்களைத் தடுத்து சமாதானப்படுத்தினர். மேலும், இக்கொலை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தப்பியோடிய குற்றவாளிகளைத் தேடும் பணியில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
