பதற்றத்தில் வளைகுடா... "ஈரானிடம் இனி மென்மையான பேச்சுக்கே இடமில்லை" - ட்ரம்ப் கொடுத்த வார்னிங்!

 
ட்ரம்ப் ட்ரம்ப்

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வரும் மோதல் போக்கு உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதிபர் டிரம்ப் ஈரானுக்கு எதிராக இதுவரை இல்லாத அளவிற்கு மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். "ஈரானிடம் இனி மென்மையான அணுகுமுறை கிடையாது" என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ள அவர், தனது சமூக வலைதளப் பக்கத்தில் துப்பாக்கியுடன் கூடிய புகைப்படத்தைப் பகிர்ந்து தனது ஆக்ரோஷமான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

அணு ஆயுத ஒப்பந்தம் மற்றும் பிராந்திய பாதுகாப்பு விவகாரங்களில் ஈரான் புத்திசாலித்தனமாகச் செயல்பட்டு விட்டுக்கொடுக்காவிட்டால், அந்நாடு இதுவரை சந்திக்காத மிகக் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என டிரம்ப் அதிரடியாகக் கூறியுள்ளார்.

ட்ரம்ப்

சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் வர்த்தகக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வரும் சூழலில், இதற்கு ஈரானே காரணம் என அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. ஈரானின் அணு ஆயுதக் கனவைத் தகர்ப்பதே தனது முதன்மை நோக்கம் என்று கூறும் டிரம்ப், அந்நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழும் எண்ணெய் ஏற்றுமதியை முற்றிலுமாக முடக்கும் 'நீண்டகாலக் கடல்வழி முற்றுகை'  திட்டத்தை முன்னெடுத்து வருகிறார். இதன் மூலம் ஈரானுக்குச் செல்லும் வருமானத்தைத் தடுத்து, அந்நாட்டைப் பேச்சுவார்த்தைக்குப் பணிய வைக்க அமெரிக்கா தீவிரமாக முயன்று வருகிறது.

டிரம்பின் இந்த மிரட்டலால் வளைகுடா நாடுகளில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. ஈரானின் பிடிவாதமான போக்கால் புதிய பொருளாதாரத் தடைகள் மற்றும் ராணுவக் கட்டுப்பாடுகளை விதிக்க வெள்ளை மாளிகை தயாராகி வருகிறது. ஏற்கனவே கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள ஈரான், அமெரிக்காவின் இந்தத் தீவிரமான முற்றுகைத் திட்டத்தால் மேலும் நிலைகுலையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ட்ரம்ப்

"ஒன்று ஒப்பந்தத்திற்கு வாருங்கள், இல்லையேல் அழிவைச் சந்திக்கத் தயாராகுங்கள்" என்ற பாணியில் டிரம்ப் விடுத்துள்ள இந்த எச்சரிக்கை, உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் இந்த அதிரடி நகர்வு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், உலக நாடுகள் இந்த விவகாரத்தை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.