உலக நாடுகள் பதற்றம்... இஸ்ரேலின் ஹைஃபா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது மீது ஈரான் ஏவுகணை வீச்சு!

 
இஸ்ரேல் ஈரான் போர் இஸ்ரேல் ஈரான் போர்

இஸ்ரேலின் வடக்கு பகுதியில் உள்ள ஹைஃபா நகரில் அமைந்துள்ள அந்நாட்டின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது ஈரான் நேற்றிரவு அதிரடி ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் தன்னிச்சையாக நடத்தப்பட்டது அல்ல. கடந்த மார்ச் 18ம் தேதி ஈரான் நாட்டின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு வயலான 'தெற்கு பார்ஸ்' மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாகவே இந்த ஏவுகணைகளை ஈரான் ஏவியுள்ளது.

ஏவுகணை தாக்கியதில் சுத்திகரிப்பு ஆலையின் ஒரு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. முதற்கட்ட தகவல்களின்படி, இந்தத் தாக்குதலில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என இஸ்ரேல் அவசர கால மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். ஏவுகணைத் துகள்கள் மின் கம்பிகள் மீது விழுந்ததால், ஹைஃபா நகரின் சில பகுதிகளில் தற்காலிகமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சுமார் 45 நிமிடங்களில் மின்சாரம் மீண்டும் சீரமைக்கப்பட்டது.

ஈரான் போர் இஸ்ரேல்

இஸ்ரேல் எரிசக்தித் துறை அமைச்சர் எலி கோஹன் கூறுகையில், "தாக்குதலால் சிறிய அளவிலான சேதங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளன. நாட்டின் ஒட்டுமொத்த உள்கட்டமைப்பிற்குப் பெரிய பாதிப்பு இல்லை. நிலைமை தற்போது முழுமையாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது," எனத் தெரிவித்துள்ளார்.

தாக்குதலுக்குள்ளான இந்த ஆலை இஸ்ரேலின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக உள்ளது: இஸ்ரேலின் 60% டீசல் தேவையை இந்த ஆலைதான் பூர்த்தி செய்கிறது. நாட்டின் 50% பெட்ரோல் உற்பத்தி இங்குதான் நடைபெறுகிறது. எனவே, இங்கு ஏற்படும் சிறிய பாதிப்பும் இஸ்ரேலின் எரிபொருள் விநியோகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஈரான் போர் இஸ்ரேல்

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரல் 115 டாலரைத் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.