திருப்பரங்குன்றம் மலையில் மீண்டும் பதற்றம்… தீபம் ஏற்ற சென்ற பெண்கள் கைது

 
தீபம்
 

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் பரபரப்பாக நீடிக்கும் நிலையில், சிக்கந்தர் பாதுஷா பள்ளிவாசல் சார்பில் இன்று இரவு சந்தனக்கூடு திருவிழாவிற்கான கொடியேற்றம் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடாக நேற்று நான்கு இஸ்லாமியர்கள் மலைக்கு சென்றதற்கு எதிர்ப்பு கிளம்பியது. பழனியாண்டவர் கோவில் தெருவை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்பினர் காவல்துறையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

திருப்பரங்குன்றம்

இந்த நிலையில், இன்று இரவு கொடியேற்றம் நடைபெற உள்ள நேரத்தில், பழனியாண்டவர் கோவில் தெருவை சேர்ந்த மக்கள் அகல்விளக்கு சட்டி ஏந்தி மலைக்கு சென்று தீபம் ஏற்ற வேண்டும் என்று கோஷமிட்டபடி வந்தனர். இதனை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். சம்பவ இடத்தில் உடனடியாக பதற்றம் ஏற்பட்டது.

திருப்பரங்குன்றம் மலை

காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய போதும், இஸ்லாமியர்களுக்கு கொடியேற்ற அனுமதி அளித்தால் தங்களுக்கும் தீபம் ஏற்ற அனுமதி வேண்டும் என மக்கள் போராட்டத்தை கைவிடவில்லை. இதையடுத்து, அரசு பேருந்து மூலம் பழனியாண்டவர் கோவில் தெருவை சேர்ந்த இருவருக்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட சிலர் அங்கிருந்து அகற்றப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.