நெல்லையில் பரபரப்பு... ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் 9.5 கிலோ கஞ்சா பறிமுதல்!

 
ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில்

மேற்கு வங்கத்தில் இருந்து கன்னியாகுமரி நோக்கி இயக்கப்பட்ட வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்தி வரப்பட்ட பல லட்சம் மதிப்பிலான கஞ்சா மற்றும் குட்கா புகையிலைப் பொருட்களை ரயில்வே காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து புறப்பட்டு நெல்லை வழியாகக் கன்னியாகுமரிக்குச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில், ரயில்வே காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பச்சோரா உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் தலைமையிலான காவல்துறையினர் தீவிரப் போதைப்பொருள் தடுப்பு சோதனையில் ஈடுபட்டனர்.

கஞ்சா கடத்தல்

ரயிலின் இன்ஜினை ஒட்டியிருந்த பொதுப் பெட்டியில் உரிய உரிமையாளர் இல்லாமல் கிடந்த பையைச் சோதித்தபோது, அதில் 9½ கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அருகில் இருந்த மற்றொரு வெள்ளை நிறச் சாக்குப்பையில் 9 கிலோ குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களும் கைப்பற்றப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட அனைத்துப் போதைப்பொருட்களையும் ரயில்வே போலீசார் உடனடியாகப் போதைப்பொருள் நுண்ணறிவு குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். வடமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு இயக்கப்படும் ரயில்கள் மூலம் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், காவல்துறையினர் தீவிரக் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.