திருச்சியில் பரபரப்பு.. மண்டை ஓடு இல்லாமல் எரிந்த நிலையில் பெண் எலும்புக்கூடு மீட்பு - போலீசார் தீவிர விசாரணை!
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே முழுமையாக எரிக்கப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியில் உள்ள சுடுகாட்டில் அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் உடல் எரிக்கப்பட்ட நிலையில் கிடப்பதாகக் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மண்ணச்சநல்லூர் காவல்துறையினர், அங்கு முழுமையாக எரிந்து எலும்புக்கூடாக மாறியிருந்த பெண்ணின் உடலைக் கைப்பற்றினர்.

மீட்கப்பட்ட எலும்புக்கூட்டில் மண்டை ஓடு இல்லாதது காவல்துறையினருக்குப் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. மேலும், அந்த எலும்புக்கூட்டின் அருகில் எரிந்த நிலையில் கிடந்த பாசி மாலை, சிவப்புச் சேலைத் துண்டுகள் மற்றும் புதிய பச்சை மண்பானை ஆகியவற்றை போலீசார் கைப்பற்றி தடயவியல் சோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இப்பெண் வேறு எங்குேனும் படுகொலை செய்யப்பட்டு, பின்னர் உடலை இங்கு கொண்டு வந்து பெட்ரோல் அல்லது வேறு எரியக்கூடிய பொருட்களை ஊற்றி எரித்துச் சாட்சியங்களை அழிக்க முயன்றனரா என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். இப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்வதுடன், அருகில் உள்ள காவல் நிலையங்களில் பதிவாகியுள்ள பெண்கள் மாயமான வழக்குகள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
