முதல்வர் திருச்சி வரும் நிலையில் பதற்றம்... கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இன்று திருச்சி மாவட்டத்திற்குத் தனது முதல் அதிகாரப்பூர்வ வெளியூர் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று மாலை மின்னஞ்சல் வாயிலாக விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்று, கடந்த மே 10-ஆம் தேதி தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய். பதவியேற்புக்குப் பின் முதன்முறையாக இன்று திருச்சிக்கு வரவுள்ள நிலையில், அங்குள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பாதுகாப்புப் படையினரிடையே பெரும் உஷார் நிலையை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் த.வெ.க. தலைவர் விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளிலும் ஒரே நேரத்தில் போட்டியிட்டு, இரண்டிலும் மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்தியத் தேர்தல் விதிகளின்படி, ஒரு மக்கள் பிரதிநிதி ஒரே நேரத்தில் இரண்டு தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினராக நீடிக்க முடியாது. இதன் காரணமாக, அவர் தனது திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை முறைப்படி ராஜினாமா செய்துவிட்டு, பெரம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும், தமிழக முதலமைச்சராகவும் தொடர்ந்து வருகிறார்.

தன்னை வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கு நேரில் நன்றி தெரிவிப்பதற்காக, முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின் தனது முதல் வெளியூர் பயணமாக இன்று திருச்சிக்கு வரும் அவர், அங்கு நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார்.
முதலமைச்சர் விஜய்யின் வருகைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் இறுதி கட்டத்தை எட்டியிருந்த நிலையில், நேற்று மாலை இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு மர்ம நபர்களிடம் இருந்து வெடிகுண்டு மிரட்டல் செய்தி வந்துள்ளது. மிரட்டல் வந்த உடனே திருச்சி மாநகரக் காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றுதல் பிரிவு நிபுணர்கள் ஆட்சியர் அலுவலகத்திற்கு விரைந்தனர்.
பாதுகாப்புப் படையினர் மோப்ப நாய்களின் உதவியுடனும், அதிநவீன மெட்டல் டிடெக்டர் கருவிகளைக் கொண்டும் ஆட்சியர் அலுவலக வளாகம், கட்டட உட்பகுதிகள் மற்றும் வாகன நிறுத்தங்கள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் விடிய விடியத் தீவிரச் சோதனையில் ஈடுபட்டனர். முதற்கட்டச் சோதனையில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எதுவும் சிக்காததால், இது வதந்தியாக இருக்கலாம் எனப் போலீசார் கருதினாலும் கண்காணிப்பு பலமடங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு திருச்சி மாவட்ட நிர்வாகம் பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரத்திக் தயாள் இ.ஆ.ப. பிறப்பித்துள்ள அவசர உத்தரவின்படி, இன்று திருச்சி மாவட்ட எல்லைக்குள் ட்ரோன்கள் (Drones) மற்றும் மனிதரற்ற வான்வழி வாகனங்கள் பறக்க முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறுவோர் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை பாயும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து முதலமைச்சர் விஜய் திறந்தவெளி வாகனத்தில் புறப்பட்டு டி.வி.எஸ். டோல்கேட், பழைய பால் பண்ணை மற்றும் சத்திரம் பேருந்து நிலையம் வழியாகப் பொதுமக்களைச் சந்திக்க உள்ளதால், வழித்தடம் எங்கும் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுத் திருச்சி மாவட்டம் தற்பொழுது முழுப் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார் என்பது குறித்து சைபர் க்ரைம் போலீசார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
