உலக நாடுகளிடையே பதற்றம்... ஈரான் அணுசக்தி மையம் மீது தாக்குதல் - பதிலடியாக இஸ்ரேல் மீது 'கிளஸ்டர்' ஏவுகணை வீச்சு!

 
ஈரான் அணுசக்தி  மையம் போர் ஈரான் அணுசக்தி  மையம் போர்

ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் இடையிலான போர் 22-வது நாளை எட்டியுள்ள நிலையில், இரு நாடுகளும் அணுசக்தி மையங்கள் மற்றும் மக்கள் வசிக்கும் பகுதிகளை இலக்கு வைத்துத் தாக்கி வருவது உலக நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மேற்காசியப் பிராந்தியத்தில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், நேற்று இரு தரப்பிலும் மிக முக்கியமான உள்கட்டமைப்புகள் மற்றும் பொது இடங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

ஈரானின் பிரதான அணுசக்தி செறிவூட்டல் மையமான நட்டான்ஸ் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியப் படைகள் வான்வழித் தாக்குதலை நடத்தின. இந்தத் தாக்குதலால் சில கட்டடங்கள் சேதமடைந்தன. இருப்பினும், எவ்விதமான அணுக்கதிர்வீச்சு கசிவும் ஏற்படவில்லை என்று ஈரான் அணுசக்தி அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது. இது சர்வதேச விதிமுறைகளை மீறிய "குற்றவியல் நடவடிக்கை" என்று ஈரான் சாடியுள்ளது. ரஷ்யாவும் இந்தத் தாக்குதலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஈரான் இஸ்ரேல் கத்தார் போர்

ஈரான் தனது அணுசக்தி மையம் தாக்கப்பட்டதற்குப் பதிலடியாக இஸ்ரேல் மீது சரமாரியாக ஏவுகணைகளை ஏவியுள்ளது. இஸ்ரேலின் ரிஷோன் லெட்சியான் பகுதியில் உள்ள ஒரு மழலையர் பள்ளி மீது ஈரானின் 'கிளஸ்டர்' ஏவுகணை விழுந்து வெடித்தது. சனிக்கிழமை விடுமுறை என்பதால் குழந்தைகள் யாரும் அங்கு இல்லை, இதனால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

மழலையர் பள்ளி உட்பட இஸ்ரேலின் சுமார் 12-க்கும் மேற்பட்ட இடங்களில் ஈரான் ஏவுகணைகளை வீசியுள்ளது. இதில் குறைந்தது 2 பேர் காயமடைந்துள்ளனர். இஸ்ரேலின் டிமோனா அணு ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள பகுதிக்கு அருகிலுள்ள ஆராட் மற்றும் டிமோனா நகரங்களில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் சுமார் 100 பேர் காயமடைந்துள்ளனர்.

ஈரான் அணுசக்தி  மையம் போர்

48 மணி நேரத்திற்குள் ஈரான் தனது 'ஹார்முஸ் ஜலசந்தியை' திறக்காவிட்டால், ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் அனைத்தையும் அமெரிக்கா அழித்துவிடும் என அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.  அமெரிக்கா தரைவழித் தாக்குதலில் ஈடுபட்டால், அமெரிக்க வீரர்களின் சவப்பெட்டிகளைக் கூட அவர்களால் எடுக்க முடியாது என ஈரான் ராணுவம் எச்சரித்துள்ளது.