வளைகுடாவில் மீண்டும் பதற்றம்.. இரண்டு சரக்கு கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!
ஓமன் வளைகுடா பகுதியில் இரண்டு சர்வதேசச் சரக்கு கப்பல்கள் மீது ஈரான் கடற்படை திடீர் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தால் மத்திய கிழக்கு நாடுகளில் மீண்டும் போர் பதற்றமும், சர்வதேசக் கடல் வழி வர்த்தகத்தில் பெரும் அச்சமும் ஏற்பட்டுள்ளது.
அண்மையில் அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே சில அமைதி உடன்பாடுகள் எட்டப்பட்டிருந்தன. இருப்பினும், உலக வர்த்தகத்தின் முக்கியப் பாதையாகக் கருதப்படும் ஹர்முஸ் ஜலசந்தியை தங்களது அனுமதியின்றி எந்தவொரு கப்பலும் கடக்கக் கூடாது என்றும், மீறினால் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகும் என்றும் ஈரான் தொடர்ந்து எச்சரித்து வந்தது.

ஓமனின் லிமாஹ் கடற்பகுதிக்கு அருகே சர்வதேசக் கப்பல் போக்குவரத்துப் பாதையில் சென்று கொண்டிருந்த போது இந்த ஏவுகணைத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. ஈரானின் இந்தத் திடீர் தாக்குதலில் இலக்காக்கப்பட்ட இரண்டு சரக்கு கப்பல்களுக்கும் ஏற்பட்டுள்ள சேதங்கள் அல்லது அதில் பயணித்த ஊழியர்களின் நிலை குறித்த அதிகாரப்பூர்வ விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

சர்வதேசக் கடல்சார் சட்டங்களை மீறி ஈரான் நடத்தியுள்ள இந்த ஏவுகணைத் தாக்குதலுக்குப் பல்வேறு நாடுகள் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்யத் தொடங்கியுள்ளதால், வளைகுடா பகுதியில் மீண்டும் ராணுவக் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது.
