பயங்கரம்.. 13 வயது சிறுமி நரபலி; தாய் உட்பட 3 பேர் கைது!
ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டத்தில் உள்ள குசும்பா கிராமத்தில், நரபலி என்ற பெயரில் 13 வயது சிறுமி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
குசும்பா கிராமத்தைச் சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், தனது 13 வயது மகளைக் கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார். வீட்டில் நடைபெற்ற ஒரு ரகசிய மாந்திரீகச் சடங்கின் ஒரு பகுதியாக இந்த நரபலி கொடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. ஒரு மாந்திரீகப் பெண் மற்றும் ஒரு ஆணின் தூண்டுதலின் பெயரிலேயே இந்த விபரீத முடிவை அந்தத் தாய் எடுத்துள்ளார்.

சிறுமியின் மரணம் குறித்துத் தகவல் அறிந்த ஹசாரிபாக் மாவட்ட போலீசார், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். சிறுமியின் தாய், சடங்குகளை முன்னின்று நடத்திய மாந்திரீகப் பெண் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த ஒரு ஆண் என மொத்தம் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். எதற்காக இந்த நரபலி கொடுக்கப்பட்டது? இதன் பின்னணியில் வேறு ஏதேனும் கும்பல் உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
நாகரிகம் வளர்ந்த இந்த காலத்திலும், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் நிலவி வரும் இத்தகைய மூடநம்பிக்கைகள் சமூக ஆர்வலர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. குசும்பா கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
