பாகிஸ்தானில் பயங்கர குண்டுவெடிப்பு... 24 பேர் பலி; 30 பேர் படுகாயம்!

 
பாகிஸ்தான்
 

தென்மேற்கு பாகிஸ்தானின் குவெட்டா ரயில் நிலையத்தில் இன்று அதிகாலை நடந்த தற்கொலைப்படை குண்டுவெடிப்பில் குழந்தைகள் உட்பட 24 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த குண்டுவெடிப்பில் 30 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

குவெட்டாவில் உள்ள போலீஸ் அதிகாரிகள், ரயில் நிலையத்தில் நடந்த குண்டு வெடிப்பு 'தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதலாகத் தெரிகிறது' என்று கூறி இருந்தாலும் இன்னும் அதை உறுதிப்படுத்த விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்தனர். 

பாகிஸ்தானின் குவெட்டா ரயில் நிலையத்தின் முன்பதிவு அலுவலகத்தில் பொதுவாக மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் இந்த குண்டுவெடிப்பு ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

பலுசிஸ்தான் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஷாஹித் ரிந்த், போலீசாரும் பாதுகாப்புப் படையினரும் சம்பவ இடத்துக்குச் சென்றுள்ளதாகவும், வெடிகுண்டு செயலிழப்புப் படையினர் தடயங்களைச் சேகரித்து வருவதாகவும் தெரிவித்தார். வெடிப்பின் தன்மை குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள மருத்துவமனைகள் அவசரநிலையை அறிவித்துள்ளன. மேலும் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக ரிண்ட் கூறினார்.

இது குறித்து வெளியான வீடியோ காட்சிகள் மேடை முழுவதும் பரந்த இடிபாடுகள் சிதறிக் கிடப்பதைக் காட்டுகிறது. ரயில் நிலையத்தில் இருந்து பெஷாவர் செல்லும் வழியில் புறப்படத் தயாராக இருந்த போது இந்த குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது.