பயங்கரம்... காதலியைக் கொன்றுவிட்டு லாரி முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே காதலியைக் கொன்று விட்டு, இளைஞர் ஒருவர் லாரி முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓசூர் அருகே உள்ள கெலமங்கலம் (ஜி.மங்கலம்) பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப் (21). இவர் தனது தோழியான திவ்யா ஜெயஸ்ரீ என்பவரைத் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே திடீரெனக் கடும் வாக்குவாதம் மற்றும் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த பிரதீப், திவ்யா ஜெயஸ்ரீயைத் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

காதலி உயிரிழந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த பிரதீப், உடனடியாக வீட்டிலிருந்து வெளியேறி சாலையில் வேகமாக வந்த லாரி ஒன்றின் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார். இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். எனினும், தீவிர சிகிச்சை பலனின்றி பிரதீப்பும் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துக் கெலமங்கலம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, கொலை மற்றும் தற்கொலைக்கான முதன்மைக் காரணம் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
