பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 17 பயங்கரவாதிகள் பலி!

 
பாதுகாப்பு படை பாதுகாப்பு படை

பாகிஸ்தானுக்கு உட்பட்ட பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டா நகரில் கடந்த வாரம் ரயில் ஒன்றின் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 3 பாதுகாப்புப் படை வீரர்கள் உட்பட மொத்தம் 16 பேர் பரிதாபமாகப் பலியானார்கள். இந்த கொடூர சம்பவத்தைத் தொடர்ந்து பயங்கரவாதிகளை ஒழிக்கும் நோக்கில் பாகிஸ்தான் நாட்டின் பாதுகாப்புப் படையினர் அங்கு தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கினர்.

பாகிஸ்தான் ராணுவம்

மஸ்துங், நுஷ்கி, ஜெஹ்ரி, குஜ்தார் மற்றும் கெச் ஆகிய முக்கிய நகரங்களில் பாதுகாப்புப் படையினர் இந்த சோதனையை நடத்தினர். இந்த நடவடிக்கையின் போது பயங்கரவாதிகளின் பல்வேறு பதுங்கு குழிகள் முற்றிலும் தகர்க்கப்பட்டன. அப்போது அங்கு மறைந்திருந்த பித்னா-அல்-இந்துஸ்தான் என்ற அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

பாகிஸ்தான்

இதற்குப் பதிலடியாகப் பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடித் தாக்குதலில் 17 பயங்கரவாதிகள் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். மேலும் உயிரிழந்த பயங்கரவாதிகளிடம் இருந்து ஏராளமான நவீன ஆயுதங்கள், வெடிபொருட்கள் மற்றும் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கொல்லப்பட்ட இவர்கள் கடந்த காலங்களில் பல்வேறு பயங்கரவாதச் செயல்களில் நேரடியாக ஈடுபட்டு வந்தவர்கள் என ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.