தமிழகத்தில் தொடர்ந்து 3வது நாளாக தொடரும் பயங்கரம்... அரசுப் பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட 14 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

 
மருத்துவமனை

நேற்று முன் தினம் செங்கல்பட்டு மாவட்டம், நேற்று திருவள்ளூர் மாவட்டம், இன்று நாமக்கல் மாவட்டம் என்று தமிழகத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக காலை உணவு சாப்பிட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் உடல்நலக் குறைவால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் சம்பவம் தமிழகம் முழுவதும் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே அரசு பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட 14 மாணவர்களுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மல்லசமுத்திரத்தில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் இன்று காலை மாணவர்களுக்கு சேமியா கிச்சடி வழங்கப்பட்டுள்ளது. உணவை சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே அடுத்தடுத்து 14 மாணவர்களுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ஆம்புலன்ஸ்

இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள், பாதிக்கப்பட்ட மாணவர்களை உடனடியாக மல்லசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். தற்போது மாணவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதனிடையே, பள்ளியில் வழங்கப்பட்ட காலை உணவின் தரம் குறித்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதற்கான காரணத்தை கண்டறியும் வகையில், பள்ளியின் சமையல் கூடத்தில் இருந்து சேமியா கிச்சடி உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

மருத்துவமனை வாந்தி மயக்கம் மாணவர்கள்

ஆய்வகப் பரிசோதனை முடிவுகள் கிடைத்த பிறகே மாணவர்களுக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவுக்கான காரணம் குறித்து முழுமையான தகவல் தெரியவரும். இதனால், உணவு நச்சுத்தன்மை காரணமாகவே மாணவர்கள் பாதிக்கப்பட்டதாக தற்போது உறுதியாக கூற முடியாது.காலை உணவுத் திட்டம் விரிவாக்கப்பட்டுள்ள நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் ஒரே பள்ளியைச் சேர்ந்த 14 மாணவர்கள் உணவு சாப்பிட்ட பின்னர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெற்றோர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.