ஆந்திராவில் பயங்கரம்.. டெட்டனேட்டர்கள் வெடித்ததில் சிலிண்டர் வெடிப்பு - 4 பேர் உடல் கருகி பலி; 21 பேர் படுகாயம்!
ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில் உள்ள ஒரு குடியிருப்பில், சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மற்றும் கேஸ் சிலிண்டர் அடுத்தடுத்து வெடித்துச் சிதறியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். சத்ய சாய் மாவட்டம், தர்மவரம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

பாறைகளை உடைப்பதற்காகப் பயன்படுத்தப்படும் டெட்டனேட்டர்கள் அந்த வீட்டில் அதிகளவில் சேமித்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. கோடை வெப்பம் காரணமாக ஏற்பட்ட உராய்வு அல்லது அதிக சூடு காரணமாக முதலில் டெட்டனேட்டர்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்தன. இதில் ஏற்பட்ட தீயானது, சமையலறையில் இருந்த கேஸ் சிலிண்டரில் பரவியது. கண் இமைக்கும் நேரத்தில் சிலிண்டரும் வெடித்துச் சிதறியதில் அந்த வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது.
இந்தக் கோர விபத்தில் ஒரு பெண் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கி 21 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காகத் தர்மவரம் மற்றும் அனந்தபூர் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். மக்கள் குடியிருப்பு பகுதியில் ஆபத்தான வெடிபொருட்களைச் சட்டவிரோதமாகச் சேமித்து வைத்தது யார் என்பது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
