பெங்களூருவில் பயங்கரம்... டெலிவரி செய்ய வந்த இடத்தில் பெண்ணிடம் ஆணுறுப்பை காட்டிய இளைஞர்!

 
டெலிவரி

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஆன்லைன் டெலிவரி செய்ய வந்த ஊழியர் ஒருவர், வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணிடம் அநாகரிகமான முறையில் நடந்துகொண்ட அதிர்ச்சிகரமான சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வரும் இளம்பெண் ஒருவர், ஆன்லைன் தளம் மூலமாகப் பொருட்களை ஆர்டர் செய்துள்ளார். அதன்படி, அந்தப் பொருட்களை டெலிவரி செய்வதற்காக இளைஞர் ஒருவர் அந்தப் பெண்ணின் வீட்டு முகவரிக்கு வந்துள்ளார்.

பொருட்களை ஒப்படைத்த பிறகு, தனக்கு அவசரமாக சிறுநீர் கழிக்க வேண்டும் என்றும், கழிவறையைப் பயன்படுத்த அனுமதிக்குமாறும் அந்த நபர் மனிதாபிமான அடிப்படையில் கோரியுள்ளார். வீட்டில் தனியாக இருந்த போதிலும், அந்த நபரின் சூழ்நிலையைப் புரிந்து கொண்ட அந்தப் பெண், அவரை நம்பி வீட்டிற்குள் அனுமதித்துள்ளார்.

கழிவறைக்குச் சென்ற அந்த நபர், வெளியே வந்ததும் திடீரெனத் தனது ஆணுறுப்பைக் காட்டி அந்தப் பெண்ணிடம் மிகவும் அநாகரிகமான முறையில் அத்துமீறி நடக்க முயன்றுள்ளார். இதனால் நிலை குலைந்த அந்தப் பெண், சற்றும் யோசிக்காமல் துணிச்சலுடன் செயல்பட்டு அந்த நபரை வீட்டை விட்டு உடனடியாக வெளியே கழுத்தைப் பிடித்துத் தள்ளிப் பூட்டியுள்ளார்.

இந்த சம்பவத்தால் மன ரீதியாகப் பெருமளவில் பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண், தான் சந்தித்த இந்த அநாகரிகக் கொடுமை குறித்துத் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அழுது கொண்டே வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆன்லைன் டெலிவரி தளங்களைப் பயன்படுத்தும் பெண்கள், தங்களது வீட்டிற்கு வரும் அறிமுகமில்லாத நபர்களை எந்தவொரு காரணத்திற்காகவும் வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டாம் என்றும், எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் கண்ணீருடன் அவர் அந்த வீடியோவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வரும் சூழலில், சம்பந்தப்பட்ட ஆன்லைன் டெலிவரி நிறுவனம் மற்றும் பெங்களூரு சைபர் கிரைம் போலீஸார் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்து, அந்த அநாகரிக நபரைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.