திருவள்ளூரில் பட்டப்பகலில் பயங்கரம் - காவல்நிலையத்தில் கையெழுத்திட்டுத் திரும்பிய இளைஞர் வெட்டிக்கொலை!
திருவள்ளூர் அருகே குற்ற வழக்கில் வெங்கல் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டுவிட்டு நண்பருடன் இருசக்கர வாகனத்தில் திரும்பிய இளைஞரைப் பட்டப்பகலில் 5 பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் அருகே உள்ள சிட்டத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 'மாரி' என்றழைக்கப்படும் ரூபன் (33). குற்ற வழக்கு ஒன்றில் நிபந்தனை ஜாமீனில் இருந்த ரூபன், அதற்காக வெங்கல் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டுவிட்டுத் தனது நண்பர் வெங்கடேஷுடன் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது வழியில் எதிரே காரில் வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல், ரூபன் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது காரை மோதி கீழே தள்ளியுள்ளது.

இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த ரூபனை, காரில் இருந்து இறங்கிய கும்பல் கத்தி உள்ளிட்ட கொடூர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிச் சாய்த்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியது. இதில் பலத்த காயமடைந்த ரூபன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், ரூபனின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இக்கொலை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், முன்பகை காரணமாக இந்த அசம்பாவிதம் நடந்ததா என்ற கோணத்தில் தப்பியோடிய 5 பேர் கொண்ட கும்பலைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
