சென்னையில் பயங்கரம்... மண்ணுக்குள் புதைந்த தொழிலாளி சடலமாக மீட்பு... கழிவுநீர் தொட்டிப் பணியின் போது மண் சரிந்ததால் விபரீதம்!

 
கழிவுநீர் தொழிலாளி சாக்கடை

சென்னை திருவொற்றியூர் பகுதியில் கழிவுநீர் தொட்டிக்காகப் பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக மண் சரிந்து விழுந்ததில் ஒப்பந்தத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவொற்றியூர் கிராமத் தெருவில் புதிதாகக் கழிவுநீர் தொட்டி அமைப்பதற்காகப் பெரிய அளவிலான பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பூமிநாதன் (37) என்ற ஒப்பந்தத் தொழிலாளி பள்ளத்திற்குள் இறங்கிப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக மேலே இருந்த மண் சரிந்து அவர் மீது விழுந்தது.

மண்ணுக்குள் புதைந்த பூமிநாதனை மீட்க உடனடியாக மீட்புக் குழுவினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர் அவரைப் போராடிச் சடலமாக மீட்டனர். அவரது உடல் உடற்கூராய்வுக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பாதுகாப்பு உபகரணங்கள் இன்றிப் பணி நடைபெற்றதா மற்றும் ஒப்பந்ததாரரின் மெத்தனப் போக்கு காரணமா என்பது குறித்துப் திருவொற்றியூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.