ஓசூரில் பயங்கரம்... 'பெப்பர் ஸ்பிரே' அடித்து இளம்பெண் கடத்தல்... கணவன் கண் எதிரிலேயே துணிகரம் - 4 பேர் கைது!

 
பெப்பர் கடத்தல் கைது பெப்பர் கடத்தல் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் காதல் திருமணம் செய்த இளம்பெண் ஒருவரை, அவரது குடும்பத்தினரே மிளகுப்பொடி ஸ்பிரே அடித்துக் கடத்திச் சென்ற சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நரேசிங் என்பவர் தனது குடும்பத்துடன் ஓசூரில் தங்கி வியாபாரம் செய்து வந்த நிலையில், அவரது மகள் 21 வயது கோவிந்தப்பிரியா அதே பகுதியைச் சேர்ந்த 26 வயது சூர்யாவை காதலித்து வந்துள்ளார். பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி இருவரும் அண்மையில் திருமணம் செய்து கொண்டு தனியாக வசித்து வந்தனர்.

பெப்பர் கடத்தல் கைது

தனது மகள் வேறு சமூகத்தைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்ததை ஏற்க முடியாத பெண்ணின் குடும்பத்தினர், அவரைப் பழிவாங்கத் திட்டம் தீட்டியுள்ளனர். சம்பவத்தன்று கார் டிரைவர் ஒருவரின் உதவியுடன் சூர்யாவின் வீட்டிற்குள் அதிரடியாகப் புகுந்த பெண்ணின் தாய் மற்றும் சகோதரர்கள், அங்கிருந்தவர்களை நிலைகுலையச் செய்துள்ளனர்.

யாரும் எதிர்பாராத விதமாக மணமகள் கோவிந்தப்பிரியாவின் கண்ணில் மிளகுப்பொடி ஸ்பிரே அடித்து, அவரை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று காரில் ஏற்றி மின்னல் வேகத்தில் மறைந்துள்ளனர். தனது கண் முன்பே மனைவி கடத்தப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சூர்யா, உடனடியாக ஓசூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து எல்லையோர மாவட்டங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

பெப்பர் கடத்தல் கைது

கடத்தல் கும்பல் கர்நாடக மாநிலத்திற்குள் நுழைந்ததைச் செல்போன் சிக்னல் மூலம் உறுதி செய்த போலீசார், அங்கு விரைந்து சென்று பெண்ணின் தாய் சகுந்தலா மற்றும் அவரது சகோதரர்களை மடக்கிப் பிடித்தனர்.

கடத்தப்பட்ட கோவிந்தப்பிரியா பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது. மகளின் விருப்பத்தை மதிக்காமல் சட்டத்தைக் கையில் எடுத்த தாய் மற்றும் குடும்பத்தினர் 4 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

காதலித்தவரை மணந்த பெண்ணைக் குடும்பத்தினரே பெப்பர் ஸ்பிரே அடித்துக் கடத்திய இந்த வினோதச் சம்பவம் ஓசூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.