நேபாளத்தில் பயங்கரம்.. ஆற்றில் பேருந்து கவிழ்ந்து 18 பேர் உயிரிழப்பு... மீட்பு பணிகள் தீவிரம்!
நேபாளத்தில் இன்று அதிகாலை நேரிட்ட கோரமான பேருந்து விபத்து, அந்நாட்டு மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போகாராவிலிருந்து காத்மாண்டு நோக்கிச் சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்து ஒன்று, அதிகாலை 2 மணியளவில் திடீரென ஆற்றிற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
மொத்தம் 44 பயணிகளுடன் சென்ற அந்தப் பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் பாய்ந்தது. விபத்தின் வேகத்தில் பேருந்து உருக்குலைந்து பலத்த சேதமடைந்தது. இந்தத் துயரச் சம்பவத்தில் 6 பெண்கள் மற்றும் 12 ஆண்கள் என மொத்தம் 18 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து வந்த மீட்புப் படையினர் ஆற்றில் இறங்கி நீண்ட நேரம் போராடிப் பயணிகளை மீட்டனர். காயமடைந்த 8 பெண்கள், 18 ஆண்கள் மற்றும் ஒரு சிறுமி உட்பட 27 பேர் மீட்கப்பட்டுச் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகாலை நேரம் என்பதால் ஓட்டுநர் தூக்கத்தில் இருந்திருக்கலாம் அல்லது சாலை வழுக்கும் தன்மையுடன் இருந்ததால் விபத்து நேரிட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில், பலியானவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நேபாளத்தின் மலைப்பாங்கான சாலைகளில் அடிக்கடி இதுபோன்ற விபத்துகள் நிகழ்வது தொடர்கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.
