பாகிஸ்தானில் பயங்கரம்... ஒரே ஊசியால் 331 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி - விசாரணையில் சிக்கிய வீடியோ ஆதாரங்கள்!

 
ஹெச்.ஐ.வி எயிட்ஸ் ஹெச்.ஐ.வி எயிட்ஸ்

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையின் மெத்தனமான போக்கால், ஓராண்டுக்குள் 331 குழந்தைகள் எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பிபிசி ஊடகம் நடத்திய ரகசியப் புலனாய்வில், மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியமான மருத்துவ முறைகளே இதற்குக் காரணம் என்பது ஆதாரத்துடன் அம்பலமாகியுள்ளது.

பாகிஸ்தானின் டான்சா பகுதியில் உள்ள தாலுகா தலைமையக மருத்துவமனையில் இந்தத் துயரம் நிகழ்ந்துள்ளது. பிபிசி செய்தியாளர்கள் நடத்திய ரகசியப் புலனாய்வில்  செவிலியர்களும், ஊழியர்களும் ஒருமுறை பயன்படுத்திய ஊசிகளை முறையாக அகற்றாமல், அவற்றை மீண்டும் மீண்டும் வெவ்வேறு குழந்தைகளுக்குப் பயன்படுத்தியது வீடியோவில் பதிவாகியுள்ளது.

ஹெச்.ஐ.வி. எயிட்ஸ்

ஊழியர்கள் கிருமி நீக்கம் செய்யப்பட்ட கையுறைகளை அணியாமல், அசுத்தமான கைகளாலேயே ஊசி செலுத்துவதும், மருந்துக் குப்பிகளை கையாளுவதும் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 2024 முதல் அக்டோபர் 2025 வரையிலான ஓராண்டு காலத்தில் மட்டும், இந்த மருத்துவமனைக்கு வந்து சென்ற சுமார் 331 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தொற்றுக்கு ஆளான 8 வயது சிறுவன் முகமது அமின் சமீபத்தில் உயிரிழந்த சம்பவம், இந்தப் பிரச்சனையின் வீரியத்தை உலகுக்குக் காட்டியது. சாதாரண நோய்க்காக மருத்துவமனைக்குச் சென்ற தன் மகன், அங்குள்ள பாதுகாப்பற்ற ஊசி முறையால் எச்.ஐ.வி பாதிப்புக்குள்ளாகி மரணமடைந்ததாக அவனது தந்தை கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ ஆதாரங்களை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் காசிம் புஸ்தார் மறுத்துள்ளார். அந்த வீடியோக்கள் போலியானவை என்றும், மருத்துவமனையின் நற்பெயரைக் கெடுக்க எடுக்கப்பட்டவை என்றும் அவர் வாதிடுகிறார். இருப்பினும், பாகிஸ்தானில் இதுபோன்ற மருத்துவ அலட்சியங்கள் இது முதல் முறையல்ல.

ஹெஐவி எயிட்ஸ்

இதற்கு முன்னதாக சிந்து மாகாணத்தின் லார்கானா பகுதியில், இதேபோல ஒரே ஊசியைப் பயன்படுத்தியதால் சுமார் 900-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு எச்.ஐ.வி பரவியது குறிப்பிடத்தக்கது.

தற்போது பஞ்சாப் மாகாண அரசு மற்றும் உலக சுகாதார அமைப்பு இந்த விவகாரம் தொடர்பாகத் தனித்தனியாக விசாரணைகளைத் தொடங்கியுள்ளன. பாதுகாப்பற்ற ஊசி முறைகள், உரிமம் இல்லாத கிளினிக்குகள் மற்றும் போலி மருத்துவர்கள் காரணமாகப் பாகிஸ்தானில் எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவது உலக நாடுகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.