புதுக்கோட்டையில் பயங்கரம்... 17 வயது சிறுவன் மர்ம கும்பலால் வெட்டிக்கொலை!
புதுக்கோட்டை மாவட்டத்தில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த 17 வயது சிறுவன் ஒருவனை, மர்ம கும்பல் ஒன்று ஆயுதங்களால் கொடூரமாக வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் பெருமநாடு கிராமத்தைச் சேர்ந்தவர் அன்புச்செல்வன் (17). இவர் சம்பவத்தன்று தனது கிராமப் பகுதியில் உள்ள ஒரு இடத்தில் நண்பர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு பயங்கர ஆயுதங்களுடன் திடீரென நுழைந்த ஒரு மர்ம கும்பல், அன்புச்செல்வனை குறிவைத்துத் தாக்கத் தொடங்கியது. அந்த கும்பலிடமிருந்து தப்பிக்க முயன்ற அன்புச்செல்வனை, மர்ம நபர்கள் தங்களின் கைகளில் வைத்திருந்த கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர்.

மர்ம கும்பலின் இந்தத் திடீர் தாக்குதலில் அன்புச்செல்வனின் தலை மற்றும் கைகளில் பலத்த வெட்டுக் காயங்கள் ஏற்பட்டன. ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர், துடிதுடித்துச் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அன்புச்செல்வன் உயிரிழந்ததை உறுதி செய்துகொண்ட அந்த மர்ம கும்பல், அங்கிருந்து உடனடியாக தப்பியோடி தலைமறைவானது.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த உள்ளூர் போலீசார், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அன்புச்செல்வனின் உடலைக் கைப்பற்றினர். பின்னர் அவரது உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இக்கொலைச் சம்பவம் தொடர்பாகப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அன்புச்செல்வன் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் என்ன? அவருக்கும் கொலை கும்பலுக்கும் இடையே ஏதேனும் முன்விரோதம் இருந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணங்களில் போலீசார் தப்பியோடிய மர்ம கும்பலை வலைவீசித் தேடி வருகின்றனர். கிராமப்புறத்தில் 17 வயது சிறுவன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெருமநாடு பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
