சிவகாசியில் பயங்கரம்.. இன்ஸ்டாகிராம் மோதலில் இளைஞர் வெட்டிக்கொலை - 6 பேர் கைது!
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிடுவதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, இளைஞர் ஒருவர் ஒரு கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 6 பேரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
சிவகாசியைச் சேர்ந்த மாரிச்செல்வம் (18) என்ற இளைஞர், சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் (Instagram) ரீல்ஸ் மற்றும் வீடியோக்களைப் பதிவிடுவதில் ஆர்வம் கொண்டவர். மாரிச்செல்வம் வெளியிட்ட வீடியோ ஒன்றிற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே சமூக வலைதளத்திலேயே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த மோதல் முற்றவே, நேற்று மாரிச்செல்வத்தைச் சுற்றி வளைத்த ஒரு கும்பல், அவரைச் சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியோடியது. இதில் பலத்த காயமடைந்த மாரிச்செல்வம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தக் கொலைச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த சிவகாசி போலீசார், தனிப்படை அமைத்துக் குற்றவாளிகளைத் தேடி வந்தனர். இந்நிலையில், இன்று (ஏப். 29) இக்கொலையில் தொடர்புடைய மதி சங்கர், மாதவன், வெங்கடேஷ், பாண்டீஸ்வரன், முத்துப்பாண்டி, சூர்யா ஆகிய 6 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்: கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் சிவகாசி சரஸ்வதிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபகாலமாக இளைஞர்கள் மற்றும் சிறுவர்களிடையே இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் மோதல்கள் உருவாவதும், அது கொலையில் முடிவதும் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. சமூக வலைதளப் பயன்பாட்டில் இளைஞர்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும், பெற்றோர் தங்களின் பிள்ளைகளைக் கண்காணிக்க வேண்டும் எனவும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
