தென்காசியில் பயங்கரம்.. கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொடூரமாக கொன்ற மனைவி - சிசிடிவி மூலம் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்!

 
கள்ளக்காதல்

தென்காசி மாவட்டம் பண்பொழி பகுதியில் தோட்டத்து வீட்டுத் தூண்களில் அடித்துக் கொலை செய்யப்பட்டு கிடந்த நபர் குறித்த வழக்கில், அவரது மனைவியும் கள்ளக்காதலனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அடுத்த பண்பொழி அருகே உள்ள தோட்டத்தில் கடந்த 10-ஆம் தேதி அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் பலத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். இதுகுறித்து இலத்தூர் காவல்துறையினர் துணை சூப்பிரண்டு அதியமான் தலைமையில் தனிப்படை அமைத்துத் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

கள்ளக்காதல்

பண்பொழி - தென்காசி சாலையில் உள்ள 26 கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் இரண்டு முறை வந்து சென்ற காரைக் கண்டறிந்தனர். அந்த வாகனம் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த வாடகை கார் என்பது தெரியவந்தது.

ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த அப்துல் ரகுமான் (50) என்பவரைக் கொல்லப்பட்டவர் என அடையாளம் கண்ட போலீசார், இவ்வழக்கில் தொடர்புடைய அதே பகுதியைச் சேர்ந்த ஓட்டல் ஊழியர் இசை இந்திரகுமார் (36) மற்றும் அப்துல் ரகுமானின் மனைவி அம்சா நிஷா (43) ஆகியோரைக் கைது செய்தனர். அப்துல் ரகுமான் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்ததால், கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருப்பதாகக் கருதி இருவரும் அவரைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டுள்ளனர்.

பலாத்காரம் காதல் கள்ளக்காதல்

பண்பொழி பகுதியில் பம்புசெட் கட்டிடத்திற்கு ரோலிங் ஷட்டர் அமைக்க வேண்டும் எனக் கூறி அப்துல் ரகுமானை வாடகை காரில் அழைத்துச் சென்றுள்ளனர். அங்குப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, இசை இந்திரகுமார் இரும்புக் கம்பியால் அப்துல் ரகுமானின் தலையில் தாக்கியதுடன், கல்லைத் தூக்கிப் போட்டும் கொலை செய்துவிட்டுத் தப்பியோடியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட இசை இந்திரகுமார் பாளையங்கோட்டை மத்திய சிறையிலும், அம்சா நிஷா கொக்கிரகுளம் பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனையே மனைவியே காதலனுடன் சேர்ந்து தீர்த்துக்கட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.