அரபிக்கடலில் பயங்கரம்... சார்ஜாவிலிருந்து பாகிஸ்தான் சென்ற விமானம் மாயம்; கடலில் விழுந்ததாக அஞ்சப்படும் நிலையில் தீவிர தேடுதல் வேட்டை!

 
கார்கோ விமானம் கராச்சி சார்ஜா

பாகிஸ்தானைச் சேர்ந்த தனியார் சரக்கு விமான நிறுவனமான 'கே2 ஏர்வேஸ்'  நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் 737-400 ரக சரக்கு விமானம் ஒன்று, 5 பணியாளர்களுடன் அரபிக்கடலில் பறந்து கொண்டிருந்த போது திடீரென ரேடார் தொடர்பை இழந்து மாயமாகியுள்ளது. 35,000 அடி உயரத்தில் இருந்து வெறும் 2 நிமிடங்களில் சரிந்து விழுந்துள்ளதால், விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என்ற அச்சத்தில் பாகிஸ்தான் கடற்படையினர் தீவிரத் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்ஜா சர்வதேச விமான நிலையத்திலிருந்து, பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள ஜின்னா சர்வதேச விமான நிலையம் நோக்கி நேற்று இரவு 'கே2 ஏர்வேஸ்' சரக்கு விமானம் புறப்பட்டது. கராச்சியை நோக்கி வந்து கொண்டிருந்த விமானம், நேற்று இரவு பாகிஸ்தான் நேரப்படி 9:18 மணிக்குக் கராச்சியிலிருந்து மேற்கே சுமார் 155 நாட்டிக்கல் மைல் (287 கி.மீ.) தொலைவில் அரபிக்கடல் வான்பரப்பில் பறந்து கொண்டிருந்தது. அப்போது, விமானத்தில் இருந்த வழிசெலுத்தல் கருவியில்  கோளாறு ஏற்பட்டுள்ளதாக விமானிகள் கராச்சி கட்டுப்பாட்டு அறைக்கு அவசரத் தகவல் அனுப்பியுள்ளனர்.

கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் அவர்களுக்கு வழிகாட்ட முயன்ற சில நிமிடங்களிலேயே, விமானிகள் "ரோலிங் அல்லது ஃபுளோட்டிங், 1732" என்ற தங்களது கடைசி அவசரச் செய்தியைப் பதிவு செய்துள்ளனர். விமானங்களின் பயணப் பாதையைக் கண்காணிக்கும் சர்வதேச 'பிளைட் ரேடார் 24' தளம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்த விமானத்தின் கடைசி நிமிடங்கள் மிகவும் கொடூரமானவையாக இருந்துள்ளன.

35,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம், திடீரென ஒரே நிமிடத்தில் 5,000 அடி கீழே சரிந்துள்ளது. பின்னர் நொடிப் பொழுதில் மீண்டும் 6,000 அடி மேலே எழும்பி, உடனடியாகக் கட்டுப்பாட்டை இழந்து செங்குத்தாகக் கடலை நோக்கிப் பாய்ந்துள்ளது. ரேடாரில் பதிவான அதன் கடைசி சிக்னல், அது கடல் மட்டத்திலிருந்து வெறும் 1,100 அடி உயரத்தில் இருந்தபோது, ஒரு நிமிடத்திற்கு 22,400 அடி என்ற வேகத்தில் (மணிக்கு சுமார் 400 கி.மீ.) கீழே விழுந்து மறைந்துள்ளதைக் காட்டுகிறது. நேற்று இரவு 9:21 மணிக்கு அதன் அனைத்துத் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டன.

விமானம் மாயமானதைத் தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் மற்றும் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி ஆகியோர் தங்களது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளனர். மேலும், விமானத்தில் இருந்த 5 பணியாளர்களின் குடும்பத்தினருக்குத் தங்களது ஆறுதல்களைக் கூறியுள்ளனர்.

விமானத்தில் கேப்டன் முகமது ரிஸ்வான் இத்ரீஸ் (விமானி), முதல் அதிகாரி பைசல் ஜடோய் (துணை விமானி), தவ்பிக் கான் (லோடுமாஸ்டர்), ஆரிப் சித்திக் (பொறியாளர்), முகமது ஹமீத் (பொறியாளர்) ஆகியோர் பயணம் செய்தனர். 'கே2 ஏர்வேஸ்' நிறுவனத்தின் வசம் இருந்த ஒரே ஒரு போயிங் விமானம் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.  அரபிக்கடலில் ஓர்மாரா  கடற்கரைப் பகுதிக்கு அருகே, பாகிஸ்தான் கடற்படையின் அதிநவீனப் 'பிஎன்எஸ் சுல்பிகர்'  போர்க்கப்பல், கடற்படை மற்றும் விமானப்படையின் சிறப்பு ஏடிஆர் ரக உளவு விமானங்கள் மற்றும் வணிகக் கப்பல்கள் இணைந்து விபத்துக்குள்ளான பகுதியைக் கண்டறியும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. கடலில் விழுந்துள்ளதால் கருப்புப் பெட்டியை  மீட்ட பின்னரே விபத்தின் உண்மையான காரணம் தெரியவரும். தேடுதல் பகுதியில் அசம்பாவிதங்கள் ஏதும் நேராமல் தடுக்கவும், துறைமுகப் பகுதிகளில் விபரங்களைச் சேகரிக்கவும் கடலோரக் காவல் படை போலீசார் மற்றும் கடற்படையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.