நள்ளிரவில் பயங்கரம்... சிவகங்கையில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு!

 
அரிவாள் வெட்டு மானாமதுரை சிவகங்கை அரிவாள் வெட்டு மானாமதுரை சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் வன்முறைச் சம்பவங்கள் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இடைக்காட்டூர் வன்முறையைத் தொடர்ந்து, தற்போது சீயோன் நகரில் இருவர் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல் மாவட்டத்தையே பரபரப்பாக்கியுள்ளது. மானாமதுரை அருகே உள்ள சீயோன் நகர் பகுதியில் நேற்று நள்ளிரவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

சீயோன் நகரைச் சேர்ந்த இருவர் நேற்று இரவு தங்களது பகுதியில் இருந்தபோது, அங்கு வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் திடீரென அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளது. வாக்குவாதம் முற்றவே, மறைத்து வைத்திருந்த அரிவாள்களால் அந்த கும்பல் இருவரையும் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடியது.

அரிவாள் வெட்டு

பலத்த காயமடைந்த அந்த இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு மானாமதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்திய நான்கு பேர் யார்? அவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? என்பது குறித்த விபரங்கள் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை. மானாமதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து வருவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. ஏற்கனவே இடைக்காட்டூர் கிராமத்தில் நடந்த அரிவாள் வெட்டு சம்பவம் இன்னும் மக்கள் மனதில் இருந்து மறையாத நிலையில், இப்போது மீண்டும் ஒரு தாக்குதல் நடந்துள்ளது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டுத் தப்பியோடிய நான்கு பேரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக இந்தத் தாக்குதல் நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது.

அரிவாள் வெட்டு

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் குறிப்பாகச் சிவகங்கை, மதுரை பகுதிகளில் சமீபகாலமாகச் சாதி மோதல்கள் அல்லது தனிப்பட்ட பகை காரணமாக இதுபோன்ற அரிவாள் வெட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுப் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டாலும், இதுபோன்ற சம்பவங்கள் பொதுமக்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளன.