நள்ளிரவில் பயங்கரம்... கோவில்பட்டியில் நாட்டு மருந்து கடையில் தீ விபத்து!

 
தீவிபத்து தீ விபத்து தீயணைப்பு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்திரிதோப்பு சாலையில் அமைந்துள்ள நாட்டு மருந்து கடையில் நள்ளிரவில் திடீரெனத் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

கோவில்பட்டி மந்திரிதோப்பு சாலையில் சுப்பிரமணியன் என்பவர் 'ஆயுஷ்' என்ற பெயரில் நாட்டு மருந்து கடை நடத்தி வருகிறார். வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு அவர் கடையை அடைத்துச் சென்றுள்ளார்.

இந்நிலையில், நள்ளிரவு நேரத்தில் அந்தக் கடைக்குள் இருந்து புகை வெளியேறுவதைக் கண்ட அக்கம் பக்கத்தினர், உடனடியாகத் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், பூட்டிக்கிடந்த கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று போராடித் தீயை முழுமையாக அணைத்தனர். இதனால் அருகில் இருந்த கடைகளுக்குத் தீ பரவுவது தடுத்து நிறுத்தப்பட்டு, அதிர்ஷ்டவசமாகப் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. இச்சம்பவம் குறித்துக் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.