நள்ளிரவில் பயங்கரம்.. திருவாரூரில் வாய்க்காலில் கவிழ்ந்த சொகுசு பேருந்து.. 8 பேர் படுகாயம்!

 
கவிழ்ந்த பேருந்து கவிழ்ந்த பேருந்து

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே சென்னையில் இருந்து வேதாரண்யம் நோக்கிச் சென்ற தனியார் சொகுசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணித்த 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

சென்னையிலிருந்து திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டப் பயணிகளுடன் தனியார் சொகுசு பேருந்து ஒன்று வேதாரண்யம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. பேருந்து இன்று அதிகாலை திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அடுத்த பகுதி வழியே சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது.

விபத்து

கட்டுப்பாட்டை இழந்து அங்கும் இங்கும் தறிகெட்டு ஓடிய அந்த சொகுசு பேருந்து, சாலையோரத்தில் இருந்த வாய்க்காலுக்குள் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த சமயத்தில் பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் தூக்கத்தில் இருந்ததால், திடீரென அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியே போர்க்களமாக மாறியது.

விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நன்னிலம் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள், பேருந்துக்குள் சிக்கியிருந்த பயணிகளைப் பத்திரமாக மீட்டனர். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த 8 பேரை மீட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து

இவ்விபத்து குறித்துப் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததே பேருந்து கவிழ்வதற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. அதிகாலை நேரத்தில் ஓட்டுநர் அயர்ந்து தூங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டதா? அல்லது தொழில்நுட்பக் கோளாறா? என்ற கோணத்தில் நன்னிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.