நள்ளிரவில் பயங்கரம்.. தவெக வேட்பாளர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - உயிர் தப்பிய குடும்பத்தினர்!

 
பெட்ரோல் குண்டு பெட்ரோல் குண்டு

தமிழக வெற்றிக் கழகத்தின் திருவண்ணாமலை கிழக்கு மாவட்டச் செயலாளரும், வந்தவாசி தொகுதி வேட்பாளருமான உதயகுமார் வீட்டில் நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

செய்யாறு தாலுகா அனக்காவூர் இந்திரா நகரில் வசித்து வரும் உதயகுமார், நேற்று முன்தினம் தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு நள்ளிரவில் வீடு திரும்பியுள்ளார். உதயகுமார் தனது மனைவி மற்றும் மகனுடன் உள் அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். அவரது தாய் மீனா மற்றும் உறவினர்கள் ஹாலில் படுத்து உறங்கினர்.

குண்டுவீச்சு

நேற்று அதிகாலை சுமார் 2 மணியளவில் வீட்டின் வெளியே பெட்ரோல் கருகிய வாசனை வருவதை உணர்ந்த தாய் மீனா, கதவைத் திறந்து வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது வீட்டின் வாயிற்படி மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுத் தீப்பற்றி எரிந்துக் கொண்டிருந்தது. இதில் அங்கு மாட்டியிருந்த வெட்டிவேர் மாலை எரிந்து கருகியது.

உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. வீட்டில் உறவினர்கள் அனைவரும் இருந்த நேரத்தில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல், உதயகுமாரின் குடும்பத்தினரை நிலைகுலையச் செய்துள்ளது.

பெட்ரோல் குண்டு
இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும் செய்யாறு மற்றும் அனக்காவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தவெக தலைவர் விஜய், திமுக அரசை 'லிமிடெட் கம்பெனி' என்றும் 'திசை திருப்பும் முதலீட்டுக் கழகம்' என்றும் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், அவரது கட்சி வேட்பாளர் இலக்கு வைக்கப்பட்டது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரசாரத்தின் போது தனக்கு நெருக்கடி கொடுக்கப்படுவதாக ஏற்கனவே விஜய் குற்றம் சாட்டியிருந்த சூழலில், இந்தத் தாக்குதல் சம்பவம் தவெக தொண்டர்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.